Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

24 ஆக., 2013

காதலிப்போர் கவனத்திற்கு...!


கனவினைக் கொடுத்து
தூக்கத்தைக் கெடுத்து
பாதியில் செல்வாள் பாவை!



பாதையைத் தொலைத்து
பேதையை நினைத்து
வீதியில் விழுவான் கோழை!



சேலைகள் நினைத்தால்...
சோலைகள் காய்ந்து
பாலைகள் தோன்றும்
வேலைகள் செய்திடும்!



காலைகள் இருண்டு
காரிருள் படிந்து
வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!!

புரியாத பிரியம்...!



என் கண்ணீரில்
கப்பல்விட்டு விளையாடுகிறாள்!
அந்தக் கப்பலைப்போலவே...
நனைந்து பாரமாகிறது என் மனசும்!
என் மனதின் மழைக்காலங்களில்...
அவள் நனைந்து பூரிக்கின்றாள்!
இடியும் மின்னலும் நிறைந்த கார்மேகமாய்,
என் வாழ்வும் வேகமாய் ஓடிப்போகிறது!

 

என்னைப் படுத்தும் காலங்கள்...
அவளைமட்டும் ஒன்றுமே செய்வதில்லை!
வரவிருக்கும் வசந்தத்தையும்...
வண்ணத்துப் பூச்சிகளோடும்
பூத்துக் குலுங்கும் பூக்களோடும்
அவள் இரசிப்பாள்!
அதிகாலைப் பனித்துளிகள் போல...
கொஞ்சங்கொஞ்சமாய் நான் மறைந்து போவேன்!

 

மீண்டும் ஒரு மழை வரும்...!
அந்த மழையிலும் அவள்
கப்பல்விட்டுச் சிரிப்பாள்!
சிரிக்கும் பொழுதில் தோன்றும்
அவளின் கன்ன மடிப்புக்களில்...
நான் அடங்கிப்போவேன்!

 

சிறகடிக்கும் சிட்டுக்குருவியாய்
அவள் சிரித்து விளையாட,
எங்கோ ஒரு மூலையில்...
பாலை நில வெயிலில்...
சின்னக் கால் முளைத்த என் இதயம்
மெதுமெதுவாய் நடந்து போகும்!!!

குருட்டுச் சிற்பி!



அழகாகச் செதுக்கிய
சிற்பங்களை உடைத்தெறிந்து
ஆனந்தங்கொள்ளும் அணங்குகளிற்கு...

தெறித்துக் கிடக்கும்  சிற்பப் பிணங்களின்
ஊமை அழுகுரல்கள் கேட்பதில்லை!


சிற்பத்தை சீரெடுத்த
உளிகளின் வலிகளும்...
கலைஞனின் கதறல்களும்...
எப்பொழுதும் புரிவதில்லை!


உடைந்துபோன சிற்பச் சிதறல்களை
ஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்து,
ஒட்டவைத்து மீண்டும்
உயிர்கொடுக்கும் ஆசையுடன்,


காணாமற்போன ஒருதுண்டை...
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றான் குருட்டுச் சிற்பி!


கூர்மையான விழிகளுடன் காத்துக்கிடக்கின்றன உளிகள்...
புதிதாய் ஒரு சிற்பம் வடிக்க...!

கார்கூடல்...!



அணைக்கப்பட்ட ஒளியில்
பிணைக்கப்பட்ட நிலையில்
ஆண்மையின் வன்மையிலும்
பெண்மையின் மென்மையிலும்
அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்!



செளித்து வளர்ந்த புல்வெளியும்...
அதில் வளைந்து நெளிந்த நீராறும்...
நெடிதுயர்ந்த மலைமுகடும்...
கொஞ்சும் இயற்கை எழிலை
விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள்
ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை!



மங்கிய ஒளியில் நிகழும்...
மங்களமான நிகழ்வுகளெல்லாம்
மயங்கிய நிலைகொடுக்க,
தயங்கியே தஞ்சமடைவதாய்
ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை!



இயங்கிய ஈருடலும்...
கிறங்கிய நால்விழியும்...
காரிருள் கானகத்தை உரசி...
சூடேற்றிப் பற்றவைக்க,


அடித்தோய்ந்த மழையில்
நனைந்து நின்ற மரக்கிளைகள்போல்
ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!!

கண்களால் களவாடுறாள்...!




கயல் விழியாள்...
பயல் மனசைப் பறிக்க,
வயல் வழியால் ஏதோ
புயல் வருதே!

காதலும் வேண்டாம்...
கூடலும் வேண்டாமென...
ஒதுங்கிப் போனவனின் மனம்,
பதுங்கிப் பாய்கிறதே!
செதுக்கிய சிற்பங்களின் பார்வையில்
வழுக்கிய இதயம் இடறி...
வாய்க்காலோரமாய் விழுகிறதே!

மனத்தடைகளைத் தகர்த்து...
உடலுடைகளை அவிழ்த்து...
தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி!
கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!!
கோவலனாகி கோணலாய்...
கேவலமாகி நாணலாய்...
மாறும்வரை மாற்றுகிறாள்!

முத்து முத்தாய் முத்தங்கள்...
ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்...
தூறும் மழைச் சாரலைப்போல்,
மெதுமெதுவாய் நனைக்கிறாள்!
நனைந்தவன் மேனியில்,
புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்!


சிதைந்தவனின் சிந்தையில்...
புதைந்தவனின் விந்தையில்...
இணைந்தவள்,
மொந்தையில் கள்ளூற...
மெத்தையில் உள்ளூற...
வித்தையால் விளையாடுகிறாள்!


ஒரு கள்வனிடமே களவாடி முடிக்கிறாள்!
இரு கண்களினால் களமாடி வெடிக்கிறாள்!
கண்களால் களவாட
பெண்களால்தான் முடிகிறதே!!! ;)

பஞ்ச பூதங்கள் கூத்தாடும் மஞ்சம்...



வஞ்சியிடை வளைந்தாட
பிஞ்சுக்கையில் வளையாட
கொஞ்சியவன் விளையாட
மிஞ்சியிருந்த வெட்கமும்
உரசிய மூச்சுக்காற்றில் பஞ்சாய்!

  

கட்டியவன் களைந்தாட
கட்டிலிலே அளைந்தாட
இன்பத்தில் திளைத்தாட
உடலெங்கும் வேர்த்தோட
காமக் கடலெங்கும் உணர்வலைகள்!


கார்கூந்தல் கலைந்தாட
கருவிழிகள் கலந்தாட
அங்கங்கள் எழுந்தாட
உணர்வுகள் திண்டாட
மனவானமெங்கும் வாண வேடிக்கை!

தாபங்கள் சேர்ந்தாட
தாகங்கள் தீர்ந்தாட
தேகங்கள் போராட
உரசியுரசிப் பற்றிய தீயில்
பற்றிக்கொண்டது மோகத்தீ!


கையிரும்பு கோர்த்தாட
மெய்நரம்பு தெறித்தோட
தொட்டுடல் விரித்தாட
கட்டுடல் நீர் உடைத்தோட
பட்டுடல் நிலம் நனைந்து...
ஈரலித்துப் பேதலித்தது!

23 ஆக., 2013

இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்...!


இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்...
அன்று நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே,
இன்று உன்னிடத்தில் இல்லையாம்!
கேள்விப்பட்டேன்.....!


உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்...
கண்கள் என்னை கைவிட்டன - உன்னைப்போல!
எப்போதும் திரும்பப்பெறமுடியாத
என்னுடைய  நம்பிக்கைகளை
உன்னிடத்தில் தொலைத்தவன் நான்!
இனிமேலும் அதை நான்
உன்னிடத்தில் தேட மாட்டேன்!!!

இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்...
உன் வற்றாத நினைவுகளும்
ஆற்றமுடியாத காயங்களும்
ஆறாத கோபமும் கூட.
உன்னையும் நீ செய்த துரோகத்தையும்
எப்படி மறக்கமுடியும்???
என்னை மட்டுமா...
என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி...
நீ தந்துவிட்டுப்போன பிரிவையும்
அதன் சமுதாய அடையாளத்தையும்
எப்படி மறைக்கமுடியும்???


அன்று  கண்ணீரில் நான் கலங்கிநிற்க,
காரணமில்லாத காரணங்களுக்காய்...
தூக்கியெறிந்து விட்டுப் போனாய்!
நீயின்று கலங்கையிலே....
உன்னைப்போல் என்னால்

உதறிவிட்டுப் போக முடியவில்லை.
இப்பொழுதும் என்னை நீ அழவைக்கிறாய்...
உன்னை நினைத்தல்ல,
உன் நிலையை நினைத்து!
பழிவாங்கும் எண்ணத்தில்...
உன் கண்ணீரை ரசிக்க இயலவில்லை!
நீ சிதைத்துவிட்டுப்போன மனசின்
ஆறாக் காயங்களில்
இன்னும் கொஞ்சம் ஈரம் மீதமிருக்கு...!
உன்னைப்போல் மனச்சாட்சியை
இன்னும் நான் தொலைக்கவில்லை!


காதலால் மட்டும்தான்
துரோகங்களையும் மன்னிக்க முடிகிறது !?
ஏனென்றால்...
காதலுக்கு நேசிக்க மட்டுந்தான் தெரியும்
!

********* ********* ********* ********** ********* ********* 
17-08-2013

                                          இக்கவிதையின்   இசைவடிவம் :
                                          ___________________________________


கால தேவதையும் நானும்...



முப்பது வருஷங்களாய்த் தெரியும் அவளை,
ஒரு வினாடிகூட எனைவிட்டுப் பிரியாதவள்!
எங்கெல்லாமோ எனை இழுத்துச் சென்றவள்...
இப்பொழுதும், ஒரு கேள்விக்குறியின்மேல்
என்னை உட்கார வைத்திருக்கின்றாள்!?

என் வாழ்க்கையைச் சுற்றவிட்டு  முடிச்சவிழ்ப்பதில்..
அவளுக்குக் கொள்ளைப் பிரியம்!

அவளுக்கென்ன...
அவளது சுவாரஸ்யத்துக்காக
சுவாசிப்பது நானல்லவா?
சுமைகளைச் சுமப்பதும் நானல்லவா?

அவளுக்கெங்கே தெரியப்போகிறது...
அவளோடு கூடவே வாழ்வதின் கஷ்டம்!


நான் சிறுகுழந்தையாய் இருந்தபோதில்...
இனிமையாகத்தானே இருந்தாள்!
எப்படி மாறினாள் என்று...
எனக்கே தெரியவில்லை!?


இன்றல்லாது... என்றாவது ஒருநாள்,
இவளது தொல்லை இல்லாமற் போகும்!
அப்பொழுது என் சுவாசமும்
அவள் கூடவே செல்லும்....  பழகிய பாவத்திற்காக!

எதுவுமே நடக்கவில்லை...!?


எங்கேயோ கேட்கிறது
அந்த முனகற் சந்தம்!
காரிருள் கவ்விய பொழுதில்...
ஈருடல் தழுவிய நிலையாய்...
யாருமறியாமல் நடக்கிறது கதகளி!
 

கையில் அகப்பட்டதையெல்லாம்
அள்ளியெடுக்கிறான் திருடன்!
மெய்யில் வசப்பட்டதையெல்லாம்
அள்ளிக்கொடுக்கிறாள் திருடி!
கன்னக்கோல் கன்னம் வைக்க
எண்ணம்போல் கன்னம் சொக்க,
கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது!
கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது!
 

பின்னிப் பிணைந்த அரவங்கள் போல்
எண்ணித் துணியும் அவயவங்களுக்குள்,
சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்!
தறிகெட்டுப்போன மனதுக்கும்
வெறி முற்றிப்போன உடலுக்கும்
விடை கொடுக்கின்றன துகிலங்கள்!

பாலாடை நீக்கி பால்பருக...
பசியோடு காத்திருந்த பாலகன்போல்
மேலாடை விலக்கி அடம்பிடித்து,
கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்!



வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட
நட்சத்திரப் பூக்களில் உட்கார்ந்து
தேன்குடிக்கிறது வண்டு!
உஷ்ணக் காற்றில்...
மூச்சிரைத்து மின்னுகின்றது,
மூக்குத்தி நட்சத்திரம்!

பிரிந்து நிற்கும் காற்கொலுசுகளின் நடுவே
விரிந்து கிடக்கும் புல்வெளியை
சத்தமின்றி நனைக்கின்றன...
மழைச்சாரல் துளிகள்!
தொடர்ந்து பெய்த மழையில்...
நிரம்பி வழிகின்றன இடை வெளிகள்!


சத்தமாய்த் தொடங்கி...
சந்தமாய் நகர்ந்து...
மொத்தமும் அடங்க,
வெளிச்சத்தை நோக்கி நகர்கின்றன..
துகிலணிந்த உருவங்கள்!


எதுவுமே நடக்கவில்லையென,
வெளிச்சத்தின் மேல் சத்தியம் செய்கிறது...
காரிருள்!!!

கெஞ்சிக் கேட்கிறேன்... கொன்றுவிடு !


என் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு,
ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்?
அப்படியே உன் பாதங்களால்
நசித்துக் கொன்றுவிடு!

என் வலிகளை ரசிப்பாய் என
அப்பொழுதே தெரிந்திருந்தால்,
பூக்களை வெறுக்கும்
வண்ணத்து பூச்சியாய் வாழ்ந்திருப்பேன்!


வண்ணத்தில் மயங்கி...
வாசத்தில் கிறங்கி...
வலிகளை வாங்கிய
கஷ்டம் எனக்கிருந்திருக்காது.
காலங்கடந்த ஞானம்
எனக்குள் -இப்போது!


என் மெளன மொழிகளில்
கெஞ்சிக் கேட்கிறேன்,
அப்படியே உன் பாதங்களால்
நசித்துக் கொன்றுவிடு! -இல்லையேல்,
என் முறிந்த சிறகுகள் கூட,
உன்னைக் காயப்படுத்தலாம்!!! 

பேஸ்புக்கில் நேற்று...!


பால்ய நண்பனை பேஸ்புக்கில் பார்த்தேன் - நேற்று
தெருவில் பார்த்த பள்ளிச் சிறுவனின்
புத்தகப் பையைப் போலவே கனக்கிறது மனசு!
பாடப் புத்தகங்களின் பக்கங்களைவிட
எமக்கான நினைவுப் பக்கங்கள் அதிகம்!
அவனது முகத்தைப் போலவே
எல்லாமே மாறிவிட்டது!
மாற்றங்கள் அவனுக்குள் மட்டுமல்ல,
எனக்குள்ளுந்தான்!


 

இப்போதைய "ஹாய்" "ஹலோ" பண்வழக்க வார்த்தைகளைவிட,
கண்டபடி வாயில் வரும் அப்போதைய கெட்ட வார்த்தைகளில்...
நட்பின் உரிமையும் அன்பும் நிறைந்திருந்தது!


 

நெருங்கிய  நட்புக்களை பிரிவுகள் மட்டும் பிரிப்பதில்லை!
காலங்களும் சேர்ந்தே பிரித்துவிடுகின்றன!!
மீண்டும் இணைக்கும் முகப்புத்தகம்...
பழைய நண்பர்களை "புதிதாய்" இணைத்துக்கொண்டே இருக்கிறது!
 

இது புதிதா...? அல்லது புதிரா...?
விடைதெரியாத வினாக்கள்
எனை விரட்டிக்கொண்டே வருகின்றது!
நான் காலத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றேன்!

Tc... Bye. Cu Later. :)

சிகரெட்டும் காதலும்...



விரல்களுக்கிடையில் புகைக்கும்
வெண்சுருட்டைப் போலவே...
என் இதயமும் கருகிச் சிறுக்கிறது!
புகைந்த சாம்பலைப் போல...
என் நினைவுகள் அங்கங்கே
சிதறிக் கிடக்கிறது!


 

எல்லாம் தீர்ந்து...
மூன்றாவது விரல் வந்து
தூக்கி வீசும்வரை...
அதன் போதையிலேயே கிடந்தேன்!
என்றாவது ஒருநாள்...
அது எனைச் சாகடிக்கும்
எனத் தெரிந்திருந்தும்,
அதைத் தாங்கிப்பிடித்திருந்தேன்!


 

நெருப்பும் புகையும் பழகிவிட்டது!
சுட்டாலும் மீண்டும் மீண்டும்
பற்றிக்கொள்ளச் சொல்லுது மனசு!
உள்வந்து செல்லும் புகையோடு
என் பெரு மூச்சுக்களும்

ஒருநாள் அடங்கிப்போகும்!
அதுவரை இருட்டில் இந்த
சிகப்பு வெளிச்சம் துணையிருக்கும்!!!




**** முக்கியகுறிப்பு: சிகரெட் பழக்கம் உடல்நலத்துக்கு மிகவும் கேடானது ****

விடியல்...!


இரவுகளை ஆட்கொள்ளும் இருளை,
நிலவும் நட்சத்திரங்களும் எதிர்த்து

நடத்தும் போராட்டங்கள் கூட இதமானவைதான்!
வெண்மதியை மறைக்கும் மேகங்கள்
அங்கேயே நிலைப்பதில்லை!
விலகிச்செல்லும் மேகங்கள் போல,
கடந்துபோகும் நேரங்கள் நகர்கிறது...
விடியலை நோக்கி!


 

வாழத் துடிக்கும் மனசு....
தாழப்பறக்கும் வண்ணத்துப் பூச்சிபோல,
சிறக்கடிக்கத் தொடங்கும்!
காணத்துடித்த  விடியலின் ஒளியில்
பூத்த மலர்களில் உட்கார்ந்து...
மரகத மணிகளை உருட்டி விளையாடும்!
 

குயில்களின் கானங்கேட்டு
துயின்ற கதிரவன் துயிலெழுவான்!
மனவறையில் ஒட்டிய
பனித்துளித் துயரங்கள் அனைத்தும்
கதிரவன் கதிரிலே காணாமற் போகும்!
மெல்லப் பரவும் ஒளியில்
பிரசவமாகும் விடியலில்
பரவசமாகும் பூலோகம்!


 

வலியவன் மனதிலே இருளோடு கரைய...
ஒளியிவன் வாழ்விலே விடியலாய்ப் படியும்!


ஒவ்வொரு இரவும் இன்னொரு விடியலுக்கானது!

நானொரு ஏதிலி...



சுற்றமும்  உற்றமும்
ஊர் முற்றமும்   முழு நிலவும்
கவளச் சோறும்    கருவாடும்
பனங்கட்டியும்   பணியாரமும்
மண்சட்டியும்    கல்லடுப்பும்
தட்டை வடையும்     எள்ளுப்பாகும்
ஒடியல்கூழும்    நண்டுக்கறியும்
 ஊறுகாயும்    மோர்மிளகாயும்


ஆலமரமும்    பிள்ளையார் கோயிலும்
வறுத்த கச்சானும்     வில்லுப்பாட்டும்
கிட்டிப்புள்ளும் கொக்குப்பட்டமும்
மாட்டுவண்டியும்    பொச்சுமட்டையும்
பஞ்சுமுட்டாயும்      இஞ்சித் தேநீரும்
பூவரசும்     நாதஸ்வரமும்
வாழைமரமும்     பாலைப்பழமும்
வல்லைவெளியும்    முல்லை நிலமும்
பள்ளிக்கூடமும்   பழைய நண்பரும்


சித்திரைவெயிலும்   செவ்விளநீரும்
மாரி மழையும்   மண்வாசமும்
மதவடியும் உதயன் பேப்பரும்
லுமாலா சைக்கிளும்    குச்சொழுங்கையும்
பேரூந்தும்    புழுதிக்காற்றும்
கடற்கரையும் மணல்வீடும்
கட்டுமரமும்   உடன்மீனும்
குழற்புட்டும் முட்டைப்பொரியலும்
சுடுதோசையும்   இடிசம்பலும்
பாலப்பமும்    இடியப்பமும்,

இனியெப்பவும்  கிட்டாத....பார்க்கமுடியாத.......
என் பென்னம்பெரிய பேராசைகளாயிப்போனதோ...???
நானொரு  ஏதிலி என்பதால்.....!!! 

மனைவி...!


அதிகாலை அழகாக தெரிகிறது…
அவள் முகத்தில் விழிப்பதனால்!
ஒவ்வொரு நாளும் அவளோடுதான்...
ஆனந்தமாய் விடிகிறது!


ஒவ்வொரு நொடியும் அழகாக...
விதம்விதமாய்த் தெரிவாள்!
கழுவாத முகத்தோடும்
களையாக இருப்பாள்!
களைத்தாலும் சளைக்காமல்
அவள் வேலை முடிப்பாள்!
உழைத்தாடி வரும் தலைவன்
களைப்பெல்லாம் போக,
கனிவான வரவேற்று
அன்பாகப் பார்ப்பாள்!

 

குழந்தையாய் சிரிப்பாள்…
அவனோடு.... குழந்தையும் சுமப்பாள்!
உயிரோடு உயிராக…
உலகமே அதுவாக,
அவனுக்கும் அவளுக்குமாய்…

அவளின் சின்ன உலகத்துக்காய்...
அவள் தன் உயிரையும் கொடுப்பாள்!

ஒவ்வொரு மனைவியும்
அவள் கணவனுக்கு...
இரண்டாவது தாய்தான்!!!


So...Guys!
  :wub:  Love your wife!  :wub:

அக்கரை மாடொன்றின் கவிதை...


பழஞ்சோற்றிலும் பழைய மீன்குழம்பிலும் இருந்த ருசி,
இங்குள்ள பீட்சாவிலும் பர்கரிலும்  இல்லை!
நாட்டுக்கோழி... நம்நாட்டு நாட்டாடுபோல...
கென்டுக்கியும் மக்டொனால்டும்  இல்லவே இல்லை!!

 

அழகான காரிலிங்கு  சொகுசாக சுற்றினாலும்,
ஊரிலுள்ள தெருவெல்லாம்...
சைக்கிள் மிதித்துத் திரிந்ததுபோல்
சந்தோசமாயில்லை...!
பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டால்,
வாய்மட்டுமா இனிக்கும்...?!
முழு மனசுமே சேர்ந்தினிக்குமே!



கிடைச்ச நேரமெல்லாம்
கந்தப்புவின்ர காணியில
விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட்டினை
நேரடி அலைவரிசையில்
பார்க்கமட்டுந்தான் முடிகிறது...
இரசிக்க முடியவில்லை!


அதிகாலை சுப்ரபாதத்தையும்
திருவெண்பா காலச் சங்கொலியையும்
அதிகாலைத் தூக்கத்திலும்
இரசித்த மனதுக்கு ...இப்பொழுதெல்லாம்,
வேலைகெழுப்பும்  அலாரம்
அவஸ்தையாய் இருக்கிறது!


 
இங்கையும் கோயில் இருக்கு... !
திருவிழாவும் நடக்குது...!?
ஆனால் ஊர்க்கோயில் திருவிழாவுக்கு
ஊர்ப்பெடியளோட போனதையும்,
சாமியைப் பார்க்காமல்
சாறிகட்டி வந்த பள்ளித் தோழிகளை
பார்த்து ரசிச்சதையும்
இப்பவும் நினைச்சு   ஏங்குது மனசு...!



நல்லெண்ணெய் வைத்து நன்றாக
இழுத்துக்கட்டிய  ரெட்டைப்பின்னலிலும்
எண்ணெய் வடியும்  சிரித்த முகத்திலும்
தெரிந்த பேரழகுக்கு நிகராய்,
இங்கு அலங்காரப்படுத்தப்பட்ட முகங்கள்
அழகாய்த் தெரியவில்லை!



அரும்புமீசை முளைக்க முன்னரே
அரும்பிய முதற் காதலையும்,
கொடுக்கப்படாத காதல் கடிதங்களையும்...
காலம் எனும் கறையான் அரித்துவிட்டாலும்,
இப்பொழுதும் அரும்புகின்ற நினைவுகள்...
குறுந்தாடியை விரல்களால்
மெதுவாக வருடத்தான் செய்கின்றது.



ஊரில் பட்டம்விட்டுத் திரிந்த சின்னப்பையன்...
இன்று நூலறுந்த பட்டம்போல,
எங்கோ ஒரு தேசத்தின் மூலையில்
'அகதி' என்ற பெயரோடும்...
அழகான ஊரின் அழியாத ஞாபகங்களோடும்!